மதுபான தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வாயில் முன்பு அமர்ந்து போராட்டம்.
புதுச்சேரி 15வது சட்டப்பேரவை ஐந்தாவது கூட்டத்தொடரில் இரண்டாம் பகுதி இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியது.
கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஆளுங்கட்சியின் ஆதரவு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்,
ஜான் குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், மற்றும் பி.ஜே.பி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான சிவசங்கரன், அங்காளன், கொல்லப்பள்ளி அசோக், ஆகிய 6 பேரும் திடீரென சட்ட மன்றத்தின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய மதுபான தொழிற்சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,
புதுச்சேரியில் மக்களை பாதிக்கின்ற வகையில் கொண்டுவரப்பட உள்ள புதிய மதுபான திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும், இதனை வலியுறுத்தி முதல்வர் கவர்னர் ஆகியோருக்கும் மனு அளித்தோம் ஆனாலும் அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினர்.
மேலும் பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கண் துடைப்பிற்காக சட்டமன்ற கூட்டத்தை கூட்டாமல் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் மீண்டும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள சட்டசபை உள்ளே கோஷங்களை எழுப்பியவாறு சென்று கூட்டத்திலும் பங்கேற்றனர்.
கடந்த சில மாதங்களாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அணியாக தர்ணாவில் ஈடுபட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments